கடந்த ஜூன் 7அன்று தமிழக சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி அமலாக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். அப்பொழுது, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்றும், இன்று சமச்சீர் கல்வி அமலில் உள்ள வகுப்புகளுக்கு அது தொடர வேண்டுமென்றும் அவர் கோரினார். மேலும் உரையை முடிக்கும்போது மேற்படி திருத்தத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார். உரையின் அந்தப் பகுதியை கீழே தருகிறோம்.
“...தமிழகத்திலேயும் மற்றும் பல மாநிலங்களிலும் உயர் கல்விக்கு செல்கின்ற மாணவர்களின் விகிதாச்சாரத்தைப் பார்த்தால், தனியார் கல்வி நிலையங்களில் படிக்கின்ற மாணவர்கள்தான் அதிகப்படியான எண்ணிக்கையில் உயர் கல்விக்கு செல்கிற வழி ஏற்படுகிறது.
அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் உயர்கல்விக்கு செல்லுகிற அப்படிப்பட்ட துர்பாக்கியமான நிலை இருக்கிறது. எனவே, சமச்சீர் கல்வி அமல்படுத்துவதன் மூலமாகத்தான் ஏழை, பணக்காரர்கள், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற வேறுபாடு இல்லாமல், அனைத்து மாணவர்களும் இன்றைக்கு உயர்கல்விக்குச் செல்கிற ஒரு வாய்ப்பு ஏற்படும் என்ற வகையில், ஒரு முழுமையான சமச்சீர் கல்வி செயல் படுத்தப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் இந்த நேரத்தில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்கிற அதே நேரத்தில் அதற்காக குழு அமைக்கின்ற போது ஒரு காலவரம்பிற்குள் அந்தக் குழு தனது சிபாரிசுகளை வழங்கி அதை இந்த அரசு அமல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் காலவரையறை இல்லாமல் தள்ளிப் போவது உண்மையிலேயே ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தக் கல்வி வாய்ப்பை நாம் தள்ளிப் போடுவதாக அமையும். சமூக நீதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிற காரணத்தினால் அந்தக் குழுவை ஒரு காலவரை யறைக்குள் அமைத்து சிபாரிசுகளை பெற்று அமலாக்க வேண்டுமென்று கேட்கும் அதே நேரத்தில், இங்கே முன்மொழிந்திருக்கிற திருத்தத்தினை அரசு பரிசீலனை செய்யவேண்டு மென்று கேட்டுக் கொள்கி றேன்...”
எனவே, ஒரு காலவரையறைக்குள் அது அமலாக வேண்டுமென்ற திருத்தத்தை அவர் முன்மொழிந்து வலியுறுத்தினார் என்பதையும், நடைமுறை யில் சமச்சீர் கல்வி அமலில் உள்ள வகுப்புகளுக்கு இத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டே வல்லுநர் குழுவின் பரிந்துரை யை எதிர்நோக்கலாம் என்பதையும் அவர் தனது உரையின் மூலம் கோரினார்

No comments:
Post a Comment