Friday, 10 June 2011

பல வடிவங்களில் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமை


தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை தாழ்த் தப்பட்ட, ஆதிதிராவிட மக்களின் பிரச்சனையாகும். அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்னுரிமை கொடுக்கும் என்று கூறியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

கடந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு என்று மத்திய அரசு சிறிய நிதி ஒதுக்கியது.

இந்த நிதியைக் கூட தமிழ்நாட்டில் அந்த அரசு முழுமையாக பயன் படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளது. இது வருத்தத்துக்குரியதாகும்.

மேலும் அந்த மக்களுக்கு சிறப்புக்கூறு திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்காமல் தொடர்ந்து கடந்த கால ஆட்சியில் புறக்கணிக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைக்கும் பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியாது என்கிற சமூக அநியாயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சனையிலும் அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழிபாட்டு உரிமையை பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

(ஆளுநர் உரைக்கு நன்றி தெரி வித்து சட்டப்பேரவையில் கே.பாலகிருஷ்ணன்)

சமச்சீர் கல்வியை ஒரு காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்



கடந்த ஜூன் 7அன்று தமிழக சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி அமலாக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். அப்பொழுது, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்றும், இன்று சமச்சீர் கல்வி அமலில் உள்ள வகுப்புகளுக்கு அது தொடர வேண்டுமென்றும் அவர் கோரினார். மேலும் உரையை முடிக்கும்போது மேற்படி திருத்தத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார். உரையின் அந்தப் பகுதியை கீழே தருகிறோம்.

“...தமிழகத்திலேயும் மற்றும் பல மாநிலங்களிலும் உயர் கல்விக்கு செல்கின்ற மாணவர்களின் விகிதாச்சாரத்தைப் பார்த்தால், தனியார் கல்வி நிலையங்களில் படிக்கின்ற மாணவர்கள்தான் அதிகப்படியான எண்ணிக்கையில் உயர் கல்விக்கு செல்கிற வழி ஏற்படுகிறது.

அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் உயர்கல்விக்கு செல்லுகிற அப்படிப்பட்ட துர்பாக்கியமான நிலை இருக்கிறது. எனவே, சமச்சீர் கல்வி அமல்படுத்துவதன் மூலமாகத்தான் ஏழை, பணக்காரர்கள், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற வேறுபாடு இல்லாமல், அனைத்து மாணவர்களும் இன்றைக்கு உயர்கல்விக்குச் செல்கிற ஒரு வாய்ப்பு ஏற்படும் என்ற வகையில், ஒரு முழுமையான சமச்சீர் கல்வி செயல் படுத்தப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் இந்த நேரத்தில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்கிற அதே நேரத்தில் அதற்காக குழு அமைக்கின்ற போது ஒரு காலவரம்பிற்குள் அந்தக் குழு தனது சிபாரிசுகளை வழங்கி அதை இந்த அரசு அமல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் காலவரையறை இல்லாமல் தள்ளிப் போவது உண்மையிலேயே ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தக் கல்வி வாய்ப்பை நாம் தள்ளிப் போடுவதாக அமையும். சமூக நீதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிற காரணத்தினால் அந்தக் குழுவை ஒரு காலவரை யறைக்குள் அமைத்து சிபாரிசுகளை பெற்று அமலாக்க வேண்டுமென்று கேட்கும் அதே நேரத்தில், இங்கே முன்மொழிந்திருக்கிற திருத்தத்தினை அரசு பரிசீலனை செய்யவேண்டு மென்று கேட்டுக் கொள்கி றேன்...”

எனவே, ஒரு காலவரையறைக்குள் அது அமலாக வேண்டுமென்ற திருத்தத்தை அவர் முன்மொழிந்து வலியுறுத்தினார் என்பதையும், நடைமுறை யில் சமச்சீர் கல்வி அமலில் உள்ள வகுப்புகளுக்கு இத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டே வல்லுநர் குழுவின் பரிந்துரை யை எதிர்நோக்கலாம் என்பதையும் அவர் தனது உரையின் மூலம் கோரினார்

Wednesday, 8 June 2011

பட்டாவும், நிலமும் வழங்குக...

சிதம்பரத்தில் பெண்கள் கல்லூரி துவக்கிட சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை...


தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் முதன்மை துறையான வேளாண்மை துறை மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரம் விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக நேஷனல் கிரைம்ஸ் ரெக்கார்ட் பீரோ என்ற மத்திய அரசு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இத்தற்கொலைகள் குறித்து இந்த அரசு விசாரித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.

விவசாய நிலங்கள் கட்டுப்பாடின்றி வீட்டுமனைகளாகவும் குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றப்படுகின்றன. இதனால் சாகுபடி பரப்பளவு வேகமாக குறைந்து எதிர்காலத்தில் மாநிலத்தின் உணவு தேவைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. எனவே, விவசாய நிலங்கள் விவசாயம் அல்லாத பணிக்கு மாற்றப்படுவதற்கு தடை விதிக்கவேண்டும்.

கரும்பு, நெல் உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்படியான விலை தீர்மானிக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 வழங்குவதோடு, கொள்முதலை விரிவுப்படுத்த வேண்டும். அதே போல் கரும்பு டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் வழங்க வேண்டும்.

கூட்டுறவு மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குவதை உத்தரவாதப் படுத்த வேண்டும். வேளாண்மை இல்லாத பல்வேறு பணிகளில் பணியாற்றி வரும் விவசாயத் தொழிலாளர்களின் சமூக நல பாதுகாப்பு திட்டத்தை அரசு முழுமையாக, நிறைவேற்ற வேண்டும்.

ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ள பண்ணைசார் சிறப்பு திட்டத்தை செயல் படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவரின் சொந்தமாவட்டமான திண்டுக்கலில் 5 ஆயிரம் ஏக்கர் உச்சவரம்பு நிலம் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டும் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆட்சியில் இலவச நிலம் வழங்கும் திட்டத்தில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதோடு, நிலமற்ற ஏழைகளுக்கு தரிசு நிலத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கீடு :- தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த தரிசு நிலம் முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும், எனது முந்தைய ஆட்சி காலத்திலும் வழங்கப் பட்டுவிட்டன. நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க தரிசு நிலம் இல்லை.

கே.பாலகிருஷ்ணன் :- பரங்கிப் பேட்டை, நாகை, தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகளை மிரட்டி பல்லாயிரம் ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்கென அடிமாட்டுவிலைக்கு கையகப் படுத்தப்பட்டுள்ளது. இது தடுக்கப்பட வேண்டும்.

கடலோரங்களில் அனல்மின்நிலையம், ரசாயன ஆலைகள், சாயப்பட்டறை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இவற்றின்அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வனஉரிமை சட்டத்தின்படி ஒரு ஆதிவாசிக்கு கூட கடந்த ஆட்சியில் நிலம் வழங்கப்படவில்லை. கோவில் நிலம், அரசு புறம் போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் 25 லட்சம் பேர் பட்டா கேட்டு கொடுக்கப் பட்ட மனு கிடப்பில் உள்ளது. பசுமை வீடு கட்டித்தரும் திட்டத்தை அறிவித்துள்ள அரசு அதற்கு அடிப்படையாக உள்ள பட்டாவை வழங்க முன்வர வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு மாநிலம் முழுவதும் வீட்டுமனைப்பட்டா, நிலம் வழங்கப்படும் என்று கடந்த அரசு அறி வித்த, திட்டம் பல பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இதையும் நிறை வேற்றி தரவேண்டும்.

கடந்த ஆட்சி காலத்தில் புறக்கணிக் கப்பட்ட சிதம்பரம் தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனைகளை முதலமைச்சர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு என்றால் முதலில் பாதிக்கும் பகுதி சிதம் பரம். எனவே, வெள்ளத் தடுப்பு நடவடிக் கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் பரங்கிப்பேட்டை, கிள்ளைப் பகுதியில் கைவிடப்பட்ட வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இந்த தொகுதியில் பெண்களுக்கு என்று அரசு கல்லூரி கிடையாது. எனவே, அதனை அமைத்துத்தர வேண்டும்.


காவல்துறை - ரவுடிகள் கள்ள தொடர்பை தடுத்து நிறுத்துக


தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செவ்வாயன்று (07.06.2011) விவாதம் துவங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம்  சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்  பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பணநாயகத்தை முறியடித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமைதி புரட்சிக்கு தலைமை தாங்கி தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி மகத்தான மக்கள் ஆதரவோடு மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத வெற்றி பெற்று புதிதாக ஆட்சியமைத்துள்ள முதலமைச்சர், வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து வழக்கத்தை காட்டிலும் முன்னதாகவே ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டதை பாராட்டுகிறேன். இதன் மூலம் காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகுத்ததாக அந்த மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பு பெறப்பட்ட பிறகும் கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக நீதிமன்ற தீர்ப்பை அமலாக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன் பிறகு என்ன ஆனது என்று திரும்பிக்கூட பார்க்க வில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கீடு :- காவேரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில்(கெசட்டில்) வெளியிட வேண்டும். இது கர்நாடக அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும். அதற்கான நடவடிக்கையை எடுக்க இந்த அரசு உறுதியான நடவடிக்கையை மேற் கொள்ளும்.

கே.பாலகிருஷ்ணன் :- முதலமைச்சரின் விளக்கத் திற்கு நன்றி.

முதலமைச்சராக பதவி யேற்ற அன்றே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில் 7 திட்டங்களை அமலாக்கியிருப்பது நல்ல துவக்கம். அதே போல் அரசு விழாக்களை ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாக நடத்தி வருவது வரவேற்கத்தக்கது.

முதியோர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் உதவிதொகை வழங் குவது, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்குவது, கடைகோடியில் உள்ள கேபிள் இயக்குநர்கள் பாதிக்கப்படாமல் தனியார் கேபிள் டிவி கொள்ளையைத் தடுக்க அரசுடைமை யாக்குவது, அனைத்து கிராமங்களுக்கும் தார்ச்சாலை, செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர், மிக்சி வழங்குவது போன்ற பல திட்டங்கள் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

இவை அனைத்திற்கும் மேலாக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பது முன் எப்போதும் இல் லாத சிறப்பு வாய்ந்த சாதனையாகும்.

கடந்த ஆட்சியில் திமுக தலைவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் சிபிஎம் தலைவர் நாவலன் உயிருக்கு ஆபத்து என காவல் துறையிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கொடுக்கப்பட வில்லை. அவர் மனு கொடுத்த ஒருவார காலத்திலேயே வெட்டி படுகொலை செய் யப்பட்டார். இது காவல் துறையினரின் மிக மோசமான செயலுக்கு எடுத்துக் காட்டாகும்.

அடுத்ததாக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கந்துவட்டி கொடு மையை எதிர்த்து போராடிய சிபிஎம் தோழர் வேலுச்சாமி தனது உயிருக்கு ஆபத்து என காவல் துறையில் புகார் கொடுத்து வீடு திரும்புவதற்குள் அடுத்த அரைமணி நேரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட் டார். காவல் துறைக்கும், சமூக விரோதிகளுக்கும் எப்படிப்பட்ட இணைந்த செயல்பாடு கடந்த ஆட்சியில் இருந்தது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, காவல் துறையை ஒழுங்குப்படுத்துவதையும், சட்டம் ஒழுங்கை மேன்மைப் படுத்துவதையும் முன்னுரிமை பணியாக எடுத்துக் கொண்டதை பாராட்டுகிறேன்.

வேலூரில் அதிமுகவை சேர்ந்த சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட செய்தி வந்தவுடன் அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கியதுடன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை பாராட்டுகிறேன். இந்த அணுகுமுறை தொடர வேண்டும்.

கடந்த ஆட்சியில் சட்ட விரோதமாக பறிக்கப்பட்ட பலருடைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபருக்கு வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறி வித்திருப்பது பாராட்டுகுரியது. 2 ஜி அலைக்கற்றை ஊழலில் கைதான ஆண்டி முத்து ராஜா, அவரது குடும்பத்தினர் கிரின் ஹவுஸ் பிரோமோட்டர்ஸ் என்ற பெயரில் அந்த பகுதியில் ஏழை, தலித் மற்றும் பிற் படுத்தப்பட்டவர்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியுள்ளனர். இது போன்று மதுரை திருமங்கலம் பகுதியில் ஏழைகளை மிரட்டி நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சிக் காலத்தில் மணல் கொள்ளைக்குக் காரணமாக இருந்த டெண் டர்களை ரத்து செய்து புதிதாக டெண்டர் விட வேண் டும்.

ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள பொதுவிநியோகத் துறையை ஒழுங்குப்படுத்தவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ஆன்லைன் வர்த்தகம் சிறு வர்த்தகத்தில் வால் மார்ட் போன்ற அந்நிய பகாசூரா கம்பெனிகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட மக்கள் விரோத நட வடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த மோசமான நடவடிக்கைகளை எதிர்க்கவும், தொடர்ந்து மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஒதுக்கீடுகளை வெட்டி குறைப்பதை எதிர்த்தும் உறுதியான போராட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும்.

போலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும். அதே சமயம் புதியதாக குடும்ப அட்டை வேண்டி நீண்டகாலமாக மனுகொடுத்து அவதிப்படும் பலலட்சம் குடும்பங்களுக்கு உடனடியாக புதிய அட்டை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை போக்கிட மத்திய அரசு ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதை வரவேற்கிறோம். மாநில அரசு கேட் டுள்ள மின்சாரத்தை வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்.