Wednesday, 8 June 2011

பட்டாவும், நிலமும் வழங்குக...

சிதம்பரத்தில் பெண்கள் கல்லூரி துவக்கிட சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை...


தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் முதன்மை துறையான வேளாண்மை துறை மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரம் விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக நேஷனல் கிரைம்ஸ் ரெக்கார்ட் பீரோ என்ற மத்திய அரசு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இத்தற்கொலைகள் குறித்து இந்த அரசு விசாரித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.

விவசாய நிலங்கள் கட்டுப்பாடின்றி வீட்டுமனைகளாகவும் குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றப்படுகின்றன. இதனால் சாகுபடி பரப்பளவு வேகமாக குறைந்து எதிர்காலத்தில் மாநிலத்தின் உணவு தேவைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. எனவே, விவசாய நிலங்கள் விவசாயம் அல்லாத பணிக்கு மாற்றப்படுவதற்கு தடை விதிக்கவேண்டும்.

கரும்பு, நெல் உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்படியான விலை தீர்மானிக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 வழங்குவதோடு, கொள்முதலை விரிவுப்படுத்த வேண்டும். அதே போல் கரும்பு டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் வழங்க வேண்டும்.

கூட்டுறவு மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குவதை உத்தரவாதப் படுத்த வேண்டும். வேளாண்மை இல்லாத பல்வேறு பணிகளில் பணியாற்றி வரும் விவசாயத் தொழிலாளர்களின் சமூக நல பாதுகாப்பு திட்டத்தை அரசு முழுமையாக, நிறைவேற்ற வேண்டும்.

ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ள பண்ணைசார் சிறப்பு திட்டத்தை செயல் படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவரின் சொந்தமாவட்டமான திண்டுக்கலில் 5 ஆயிரம் ஏக்கர் உச்சவரம்பு நிலம் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டும் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆட்சியில் இலவச நிலம் வழங்கும் திட்டத்தில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதோடு, நிலமற்ற ஏழைகளுக்கு தரிசு நிலத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கீடு :- தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த தரிசு நிலம் முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும், எனது முந்தைய ஆட்சி காலத்திலும் வழங்கப் பட்டுவிட்டன. நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க தரிசு நிலம் இல்லை.

கே.பாலகிருஷ்ணன் :- பரங்கிப் பேட்டை, நாகை, தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகளை மிரட்டி பல்லாயிரம் ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்கென அடிமாட்டுவிலைக்கு கையகப் படுத்தப்பட்டுள்ளது. இது தடுக்கப்பட வேண்டும்.

கடலோரங்களில் அனல்மின்நிலையம், ரசாயன ஆலைகள், சாயப்பட்டறை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இவற்றின்அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வனஉரிமை சட்டத்தின்படி ஒரு ஆதிவாசிக்கு கூட கடந்த ஆட்சியில் நிலம் வழங்கப்படவில்லை. கோவில் நிலம், அரசு புறம் போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் 25 லட்சம் பேர் பட்டா கேட்டு கொடுக்கப் பட்ட மனு கிடப்பில் உள்ளது. பசுமை வீடு கட்டித்தரும் திட்டத்தை அறிவித்துள்ள அரசு அதற்கு அடிப்படையாக உள்ள பட்டாவை வழங்க முன்வர வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு மாநிலம் முழுவதும் வீட்டுமனைப்பட்டா, நிலம் வழங்கப்படும் என்று கடந்த அரசு அறி வித்த, திட்டம் பல பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இதையும் நிறை வேற்றி தரவேண்டும்.

கடந்த ஆட்சி காலத்தில் புறக்கணிக் கப்பட்ட சிதம்பரம் தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனைகளை முதலமைச்சர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு என்றால் முதலில் பாதிக்கும் பகுதி சிதம் பரம். எனவே, வெள்ளத் தடுப்பு நடவடிக் கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் பரங்கிப்பேட்டை, கிள்ளைப் பகுதியில் கைவிடப்பட்ட வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இந்த தொகுதியில் பெண்களுக்கு என்று அரசு கல்லூரி கிடையாது. எனவே, அதனை அமைத்துத்தர வேண்டும்.


No comments:

Post a Comment